கங்குவா டிரைலர் - அஜித் கொடுத்த ரியாக்ஷன் | 'கங்குவா' வெளியீடு - வழக்கு சிக்கல்களுக்குத் தீர்வு | 'பிளடி பெக்கர்' நஷ்டத்தைத் திருப்பித் தரும் தயாரிப்பாளர் நெல்சன்? | மே 1 - தொழிலாளர் தினத்தில் ரஜினிகாந்தின் 'கூலி' ரிலீஸ்? | தள்ளிப்போகும் ‛வீர தீர சூரன்' பட ரிலீஸ் | பொங்கல் ரேசில் இணையும் பாலாவின் வணங்கான் | மீண்டும் புதிய படம் இயக்கும் கே.எஸ்.அதியமான் | 'பீனிக்ஸ், எமக்குத் தொழில் ரொமான்ஸ்' வெளியீடுகள் தள்ளிவைப்பு ஏன்? | ரகசியமாக 2வது திருமணம் செய்த இயக்குனர் கிரிஷ் | கங்குவாவுடன் மோதும் கிளாடியேட்டர் |
பெரிதாக படிப்போ, பண வசதியோ ஏதுமின்றி ஒரு சாதாரண மில் தொழிலாளியாக இருந்து பின் வெள்ளித்திரையில் நுழைந்து, இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்கச் செய்யும் அளவிற்கு ஏராளமான படங்களை தயாரித்து, ஒரு மாபெரும் திரைப்படத் தயாரிப்பாளராக உயர்ந்தவர்தான் சாண்டோ எம் எம் ஏ சின்னப்ப தேவர்.
தான் தயாரிக்கும் திரைப்படங்களில் யானை, குதிரை, சிங்கம், ஆடு, மாடு, பாம்பு என ஏராளமான விலங்குகளையும், பிராணிகளையும் பயன்படுத்தி ரசிகர்களை மகிழ்விக்க முடியும் என்ற உத்தியை கையாண்டு அதில் பெரும் வெற்றி பெற்றவர் இவர். ஆரம்ப காலங்களில் ஒரு துணை நடிகராக நடித்து வந்த இவருக்கு, சொந்தமாக படம் தயாரிக்க வேண்டும் என்ற ஆசை. மேலும் தனது சகோதரர் எம் ஏ திருமுகத்தை இயக்குநராக்க வேண்டும் என்ற ஆசையும் இருந்து வந்தது. இந்த ஆசைகளோடு “தேவர் பிலிம்ஸ்” என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பிக்கத் திட்டமிட்டு அவரது நண்பரான எம் ஜி ஆரிடம் கூற, அவரும் தைரியமாக ஆரம்பியுங்கள் என்னால் முடிந்த எல்லா உதவிகளையும் நான் செய்கின்றேன் என்று கூற, உதயமானது “தேவர் பிலிம்ஸ்”.
தனது முதல் தயாரிப்பான “தாய்க்குப்பின் தாரம்” திரைப்படத்தின் கதையை தேர்ந்தெடுத்ததும், படத்தின் நாயகனாக தனது நண்பர் எம் ஜி ஆரையே நடிக்க வைப்பது என்பதையும் தீர்மானித்து விட்டார் சாண்டோ எம் எம் ஏ சின்னப்பதேவர். சிறு வயதில் தான் பார்த்துப் பிரமித்த மாடு பிடி வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை தனது முதல் படமான இத்திரைப்படத்தில் சேர்க்க தேவர் விரும்பி, தனது நண்பரும், படத்தின் நாயகனுமான எம் ஜி ஆரிடம் கூற, அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்தார்.
பின் அதற்கான மாடு தேடும் முயற்சியில் படக்குழுவினர் இறங்கினர். நல்ல கவர்ச்சியுடன் கூடிய கம்பீரத் தோற்றம், களை பொருந்திய முகம், மெய்சிலிர்க்கச் செய்யும் நடை என சர்வ லட்சணங்கள் பொருந்திய ஒரு காளை மாட்டை கொண்டு வரும்படி தேவர் கூற, படக்குழுவினர் பல இடங்களில் தேடியும் அப்படி ஒரு காளை மாடு கிடைக்காதிருந்த வேளையில், தேவரின் நெருங்கிய நண்பர் ஒருவர், மதுரை மாவட்டம் பெரியகுளத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் அத்தனை அம்சங்களும் நிறைந்த ஒரு காளை மாடு இருப்பதாகக் கூற, படக்குழுவினர் பெரியகுளத்திற்குப் பயணமாயினர்.
பெரியகுளத்தில் முஸ்லிம் மிராசுதார் ஒருவர் வீட்டின் தொழுவத்தில் இருபுறமும் கயிற்றால் கட்டி வைக்கப்பட்டிருந்த அந்த மாட்டை பார்த்ததும் தேவருக்கு பிடித்து விட, மதுரை ஜல்லிக்கட்டில் ஆண்டுதோறும் முதற்பரிசைப் பெற்று வரும் அந்தக் காளையை விற்க விரும்பாத அந்த மிராசுதார், படத்தில் வேண்டுமானால் நடிக்க வைத்துவிட்டு திரும்பக் கொண்டு வந்து விடுங்கள் என கூற, ஐயா, நான் மாட்டை ஒன்றும் செய்துவிட மாட்டேன். நான் பணம் கொடுத்து வாங்கினால்தான், அது என்னுடையது என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டு அதை பொறுப்பாக கவனித்துக் கொள்ளவும், என் விருப்பப்படி அதற்கு பயிற்சி அளிக்கவும் முடியும். எனவே பணத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். படப்பிடிப்பு முடிந்ததும் மாட்டையும் உங்களிடம் ஒப்படைத்து விடுகின்றேன் எனக் கூறி அந்த மிராசுதாரரை சம்மதிக்க வைத்து, ஆயிரம் ரூபாயை அவரிடம் கொடுத்து பின் அந்த மாட்டை படப்பிடிப்பிற்குப் பயன்படுத்தினார் சாண்டோ எம் எம் ஏ சின்னப்பதேவர்.
படத்தில் அந்தக் காளையை எம் ஜி ஆர் அடக்குவதாக வரும் அந்தக் காட்சிக்காகவே படத்தை பலமுறை பார்த்த ரசிகர்கள் அன்று ஏராளம்! ஏராளம்!! 1956ம் ஆண்டு செப்டம்பர் 21 அன்று வெளிவந்த இத்திரைப்படம் தேவருக்கும், எம் ஜி ஆருக்கும் மாபெரும் வெற்றியை ஈட்டித் தந்தது.